ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிபாளையத்தில் விவசாயியான மயில்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சரசா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு எம்.சி.ஏ பட்டதாரியான பண்டரிநாதன்(36) என்ற மகன் உள்ளார். இவருக்கு கதை, கட்டுரை எழுதுவதில் ஆர்வம் இருந்தது. இதனால் கடந்த 2014-ஆம் ஆண்டு சீனாவில் இருக்கும் ஒரு ஊடக நிறுவனத்தில் தமிழ் பிரிவில் வேலைக்கு சேர்ந்தார். அதே ஊடகத்தில் ஜப்பானைச் சேர்ந்த சியேகோ பாயாஷி(32) என்ற பெண்ணும் வேலைக்கு சேர்ந்தார்.

ஒரே நிறுவனத்தில் வேலை பார்க்கும் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்பு பண்டரிநாதனும் சியேகோ பாயாஷியும் அவரவர் பெற்றோர்களை சீனாவுக்கு வரவழைத்து விநாயகர் சிலை அமைத்து இந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்தில் விடுப்பு எடுத்துக் கொண்டு கணவன் மனைவி இருவரும் கோபிபாளையத்திற்கு வந்தனர். இதனையடுத்து பண்டரிநாதன் பல்வேறு இடங்களை தனது மனைவிக்கு சுற்றி காண்பித்தார்.

முக்கியமாக தான் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படித்த கோபி தூய திரேசாள் அரசு நிதி உதவி பெறும் தொடக்கப் பள்ளிக்கு அழைத்துச் சென்றார். பள்ளிக்கூடத்தின் சார்பாக அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து பண்டரிநாதன் தமிழில் கூறிய சிறுகதையை சியேகோ பாயாஷி ஜப்பான் மொழியில் பல குரலில் பேசி நடித்து காட்டி அசத்தினார் இதனை பார்த்த மாணவிகள் கைதட்டினர். பின்னர் தம்பதியினர் 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தகங்களை பள்ளிக்கு இலவசமாக வழங்கியுள்ளனர்.