சென்னை பாரிமுனை பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவருக்கு இன்று மர்மமான முறையில் ஒரு பார்சல் வந்துள்ளது. ஆர்வத்துடன் அந்தப் பார்சலை அந்தப் பெண் பிரித்துப் பார்த்தபோது, உள்ளே இருந்த பொருள்களைக் கண்டு அதிர்ச்சியில் அலறியுள்ளார். அந்தப் பார்சலில் மனித மண்டை ஓடு, எலும்புத் துண்டுகள் மற்றும் விபூதி ஆகியவை இருந்தன. பட்டப்பகலில் நடந்த இந்தச் சம்பவம் அந்த அலுவலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் உருவாக்கியது.
இதுகுறித்து உடனடியாக எஸ்பிளனேடு காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், அந்த மர்மப் பார்சலைப் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்தப் பார்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது? அதை அனுப்பி வைத்த மர்ம நபர் யார்? அந்தப் பெண்ணுக்கும் அவருக்கும் ஏதேனும் முன்விரோதம் இருந்ததா அல்லது மிரட்டல் விடுப்பதற்காகச் செய்யப்பட்ட செயலா? எனப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். சிசிடிவி காட்சிகள் மற்றும் கொரியர் நிறுவன முகவரிகளைக் கொண்டு குற்றவாளியை நெருங்கி வருவதாகப் போலீசார் தெரிவித்துள்ளனர்.
