திருச்சி மாவட்டத்தில் உள்ள அரியமங்கலம் காமராஜ் நகரில் முஸ்தபா என்பவர் வசித்து வருகிறார். இவர் மருந்து கடை நடத்தி வருகிறார். மேலும் முஸ்தபா அரியமங்கலம் பகுதி வர்த்தகர்கள் நலச்சங்க தலைவராகவும் இருக்கிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு முஸ்தபா ஏலச்சீட்டு குழுக்களை நடத்தி வந்தார்.

அப்போது பொன்மலை ரயில்வே காலனியில் வசிக்கும் முஸ்தபாவின் நண்பர் சேகர் தனது மகன் அருணை சீட்டு குழுக்களில் சேர்த்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2017-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் வரை மொத்தம் 28 குழுக்களில் 3 கோடி ரூபாய் மதிப்பிலான சீட்டில் சேர்ந்து அருண் பணம் எடுத்துள்ளார். ஆரம்பத்தில் பணத்தை செலுத்திய அருண் அதன் பிறகு பணத்தை கொடுக்கவில்லை.

மொத்தமாக அருண் 82 லட்சத்து 43 ஆயிரத்து 370 ரூபாய் பாக்கி வைத்துள்ளார். இதனை முஸ்தபா கேட்டபோது சேகரும் அருணும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து முஸ்தபா திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் அருண், அவரது தந்தை சேகர் ஆகியோர் மீது போலீசார் வழக்குபதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.