உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஒன்று நடந்துள்ளது. 21 வயதான சாந்தினி என்ற செவிலியர், அவர் பணிபுரிந்த மருத்துவமனையின் குளியலறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
முதற்கட்ட விசாரணையில், அவர் விஷ ஊசி மூலம் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பீகாரின் சிவான் மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தினி, கான்பூரின் லஜ்பத் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக வேலை செய்து வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அவரது சக ஊழியர்கள் தெரிவித்ததாவது – சனிக்கிழமை இரவு வேலைக்கு சென்ற சாந்தினி, ஞாயிறு காலை பணி மாற்றத்தின் போது காணப்படவில்லை. தொடர்ந்து தேடப்பட்டபோது, மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் உள்ள தனியார் அறையின் குளியலறை கதவு பூட்டப்பட்டிருந்தது. கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சாந்தினியின் உடல் தரையில் கிடப்பதோடு, அங்கு ஊசிகள் மற்றும் மருந்துகளும் சிதறிக் கிடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் இதுவரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. சாந்தினியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த துயர சம்பவம் மருத்துவமனை ஊழியர்களையும் உள்ளூர் மக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
