திரைப்படங்களில் வரும் வசூல்ராஜா எம்பிபிஎஸ் கதாபாத்திரத்தைப் போல, நிஜ வாழ்க்கையிலும் ஒரு மருத்துவ மாணவர் காப்பியடிக்கப் போய் கம்பி எண்ணும் நிலை ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ரிஷிகேஷ் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையில் எம்பிபிஎஸ் (MBBS) மாணவர்களுக்கான துணைத் தேர்வு (Supplementary Exam) நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது தேர்வு அறைக்குள் நுழைய முயன்ற மாணவர் ஒருவரின் நடத்தை அங்கிருந்த பாதுகாப்பு ஊழியர்களுக்குச் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தீவிரமாகச் சோதனை செய்தபோது, அவர் அணிந்திருந்த செருப்பைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர்.

​அந்த மாணவர் தனது செருப்பின் அடிப்பகுதியை (Sole) மிக லாவகமாக அறுத்து, அதற்குள் ஒரு மொபைல் போனை மறைத்து வைத்துத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்ல முயன்றுள்ளார். பாதுகாப்பு ஊழியர்கள் அந்தச் செருப்பைத் திறந்து உள்ளிருந்த மொபைலை வெளியே எடுக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. இந்தச் சம்பவத்தை மிகத் தீவிரமாக எடுத்துக் கொண்ட எய்ம்ஸ் நிர்வாகம், அந்த மாணவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன், தேர்வு மையத்தின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளது. “வருங்கால மருத்துவர்களே இப்படிப்பட்ட குறுக்கு வழிகளைத் தேர்ந்தெடுப்பது வேதனையளிக்கிறது” என நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர்.