இந்தியாவின் விருந்தோம்பல் உலகப்புகழ் பெற்றது என்பதற்குச் சான்றாக, ராஜஸ்தான் கிராமத்தில் நடந்த ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த மெய்கே ஹிஜ்மேன் என்ற பெண் பயணி, ராஜஸ்தானின் ஒரு குக்கிராமத்திற்குத் தனியாகச் சென்றபோது இரவு தங்குவதற்கு இடமின்றி தவித்துள்ளார். அப்போது அந்த ஊரைச் சேர்ந்த ஒரு பெண்மணி, எவ்வித தயக்கமுமின்றி மெய்கேயை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இருவருக்கும் மொழி ஒரு தடையாக இருந்தபோதிலும், ‘கூகுள் டிரான்ஸ்லேட்’ உதவியுடன் உரையாடி, ஒரு தாயைப் போல மெய்கேயை அந்தப் பெண்மணி அரவணைத்தது காண்போரை கண்கலங்க வைத்துள்ளது.
பாதுகாப்பு கருதி டென்ட் அமைக்கத் தயங்கிய மெய்கேவுக்கு, அந்த கிராமத்துக் குடும்பம் உணவும், பாதுகாப்பான தங்குமிடமும் வழங்கி உபசரித்துள்ளனர். இந்த அனுபவத்தைப் பகிர்ந்த மெய்கே, “இந்தியாவில் எனக்கு ஒரு தாயின் அன்பு கிடைத்தது” என உருக்கமாகத் தெரிவித்துள்ளார். ஹரியானாவிலும் தனக்கு இதே போன்ற கனிவான அனுபவம் கிடைத்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். “விருந்தினரைத் தெய்வமாக மதிக்கும்” இந்தியப் பண்பாடு, குறிப்பாகக் கிராமப்புறங்களில் இன்றும் உயிர்ப்புடன் இருப்பதை இந்த வீடியோ உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளது.
