சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள சாகசப் பூங்காவில், உயரமான ஊஞ்சல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர், போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் உயிரிழந்த சம்பவம் உலக அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஹுவாயிங் பகுதியில் அமைந்துள்ள ‘மாலியுயான்’ சாகசப் பூங்காவிற்கு, கடந்த மே 3-ம் தேதி லியு என்ற பெண் சுற்றுலா சென்றுள்ளார். அங்குள்ள ‘வாட்டர்ஃபால் ஸ்விங்’ எனப்படும், சுமார் 168 மீட்டர் (550 அடி) உயரத்தில் இருந்து வேகமாக ஆடக்கூடிய அதீத சாகச விளையாட்டில் அவர் பங்கேற்றுள்ளார்.
விளையாட்டு தொடங்குவதற்கு முன்னரே, தனது உடலில் பொருத்தப்பட்ட பாதுகாப்பு பெல்ட்கள் சரியாக இறுக்கமாக இல்லை என்பதை லியு கவனித்துள்ளார். இது குறித்து அங்கிருந்த ஊழியர்களிடம் அவர் சத்தமாக, “பெல்ட் சரியாகக் கட்டப்படவில்லை” என்று பலமுறை கூச்சலிட்டு எச்சரித்துள்ளார். ஆனால், ஊழியர்கள் அந்த எச்சரிக்கையைத் தீவிரமாக எடுத்துக் கொள்ளாமல் விளையாட்டைத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.
ஊஞ்சல் உயரத்தில் இருந்து வேகமாகத் தள்ளப்பட்ட சில விநாடிகளிலேயே, பாதுகாப்பு உபகரணங்கள் கழன்று லியு கீழே விழுந்துள்ளார். சுமார் 168 மீட்டர் உயரத்தில் இருந்து விழுந்த அந்தப் பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தத் துயரமானக் காட்சிகள் அனைத்தும் அங்கிருந்தவர்களால் வீடியோ எடுக்கப்பட்டு, தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
🚨💔 Heartbreaking tragedy unfolds in China again. On May 3, a female tourist named Liu died in a horrific accident at Maliuyan Adventure Park in Sichuan’s Huaying City. Strapped into the “Waterfall Swing” — a 168-meter-high ride over a roaring waterfall — she repeatedly screamed… pic.twitter.com/AUGPeQEfhv
— Aric Chen (@aricchen) May 5, 2026
இந்தச் சம்பவம் தொடர்பாகச் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. “இது துரதிர்ஷ்டவசமான விபத்து அல்ல; முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு அலட்சியக் கொலை” என்று பலரும் பதிவிட்டு வருகின்றனர். சாகசப் பூங்காக்களில் பாதுகாப்பு விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த விபத்து தொடர்பாகச் சீன அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், சாகசப் பூங்கா தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
