சீனாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான முன்னாள் துணைத் தலைவரான சாய் லெய், ஏமித்ரோபிக் லேட்டரல் ஸ்க்லரோசிஸ் என்ற கொடிய நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு இந்நோய் கண்டறியப்பட்டதில் இருந்து, தற்போது அதன் இறுதி கட்டத்தை அவர் எட்டியுள்ளார்.
இந்த நோயின் தீவிரத்தால் அவரது உடல் முற்றிலும் முடங்கி, பேசும் திறனையும் இழந்து படுக்கையிலேயே இருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். இருப்பினும், “மரணம் மட்டுமே என்னை நிறுத்த முடியும்” என்ற அசாத்தியமான மன உறுதியுடன், தற்போதும் கண் அசைவு தொழில்நுட்பத்தின் உதவியோடு தினமும் சுமார் 12 மணி நேரம் ஆன்லைனில் தீவிரமாகப் பணியாற்றி வருகிறார்.
மேலும் தன்னைத் தாக்கிய இந்த அரிய நோய்க்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாததால், உலகெங்கிலும் உள்ள நோயாளிகளைக் காப்பாற்ற சாய் லெய் ஒரு பெரும் போரைத் தொடங்கியுள்ளார். இதற்காக 20,000-க்கும் மேற்பட்ட நோயாளிகளை இணைக்கும் உலகின் மிகப்பெரிய மருத்துவத் தரவுத் தளத்தை தனது குழுவுடன் இணைந்து உருவாக்கியுள்ளார்.
இந்நிலையில் மருத்துவத் துறை விஞ்ஞானிகளுடன் இணைந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மருந்து ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ள அவர், இதற்காகத் தனது சொத்துக்களையும் கணிசமாக நன்கொடையாக வழங்கியுள்ளார். தனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நோய்க்கான தீர்வைக் காண வேண்டும் என்ற அவரது இந்த அசாத்தியப் போராட்டம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு ஒரு பெரும் உத்வேகமாக மாறியுள்ளது.
