மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ நிறுவனம் வெளியிட்டுள்ள எக்ஸிட் போல் முடிவுகள் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சிக்கு மிகப்பெரிய சாதகமாக அமைந்துள்ளது.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில், முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 177 முதல் 187 இடங்கள் வரை கைப்பற்றி, மீண்டும் அரியணையில் அமரும் என இந்தக் கணிப்பு கூறுகிறது.
மம்தாவுக்கு கடும் சவால் கொடுத்து வந்த பாஜக கூட்டணி 95 முதல் 110 இடங்களைப் பிடித்து இரண்டாவது இடத்திற்குத் தள்ளப்படும் என்றும், காங்கிரஸ் கட்சி 1 முதல் 3 இடங்களை மட்டுமே பெற்று மிகவும் பரிதாபமான நிலையைச் சந்திக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வங்கத்தில் மம்தா பானர்ஜி மீதான செல்வாக்கு குறையவில்லை என்பதையும், பாஜகவின் தீவிரப் பிரச்சாரத்தையும் மீறி திரிணாமுல் காங்கிரஸ் தனது கோட்டையைத் தக்கவைத்துக் கொண்டுள்ளதையும் இந்த முடிவுகள் காட்டுகின்றன. இருப்பினும், அதிகாரப்பூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரை அரசியல் களம் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கிறது.
