பெங்களூருவைச் சேர்ந்த 33 வயது பெண் ஊழியர் ஒருவர், பேஸ்புக் பக்கத்தில் வந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தை நம்பி சுமார் 12.77 லட்சம் ரூபாயை இழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐரோப்பாவிற்குச் சுற்றுலா செல்லத் திட்டமிட்டிருந்த அந்தப் பெண், முகநூலில் இருந்த ஒரு டிராவல் ஏஜென்சியின் பக்கத்தைத் தொடர்பு கொண்டுள்ளார்.
விசா, விமான டிக்கெட் மற்றும் தங்கும் இடம் எனப் பல்வேறு காரணங்களைக் கூறி அந்த மர்ம நபர்கள் அப்பெண்ணிடமிருந்து பல தவணைகளாக மொத்தம் 12.77 லட்சம் ரூபாயைப் பெற்றுள்ளனர்.
ஆனால், சொன்னபடி பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்யாமல் இழுத்தடித்த அந்த கும்பல், திடீரென பயணத் திட்டம் ரத்து செய்யப்பட்டுவிட்டதாகக் கூறி வெறும் 1.18 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பிக் கொடுத்துள்ளனர்.
மீதமுள்ள பெரும் தொகையைத் திருப்பித் தராமல் ஏமாற்றியதால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண், இதுகுறித்து சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். தற்போது போலீசார் வழக்குப் பதிவு செய்து, ஆன்லைன் மூலம் பணத்தை அபேஸ் செய்த அந்த மோசடி கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
