மகாராஷ்டிர மாநிலம் ஜல்காவ் மற்றும் புல்டானா மாவட்டங்களில் நிகழ்ந்த இரு வேறு விபத்துக்களில் மணப்பெண் மற்றும் காவல்துறை பணிக்குத் தயாராகி வந்த மாணவர் உட்பட நால்வர் உயிரிழந்தனர். குஜராத் மாநிலம் வாபியிலிருந்து அகோலா நோக்கி ஒரு திருமண வீட்டினர்  காரில் சென்று கொண்டிருந்தனர். அவர்கள்  நெடுஞ்சாலையில் சென்றபோது, காரின் டயர் திடீரென வெடித்தது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோரம் நின்றிருந்த கேஸ் டேங்கர் லாரி மீது பலமாக மோதியது.

இந்த கோர விபத்தில், புதுமணப் பெண் பூஜா ரவி வால்கர், தத்து பாகவத் மற்றும் ஜெகதீஷ் வால்கர் ஆகிய மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்கள் மூவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், விபத்தில் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தையின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகத் தெரிகிறது.

புல்டானா மாவட்டத்தைச் சேர்ந்த சேத்தன் சோலங்கி (18) என்ற மாணவர், காவல்துறை வேலைக்கான தேர்வுக்குத் தயாராகி வந்தார். சமீபத்தில் ச நடைபெற்ற உடற்தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற அவர், எழுத்துத் தேர்வுக்காகக் காத்திருந்தார்.

இந்நிலையில், நேற்று மாலை அரசுப் பேருந்தில் ஏறுவதற்கு முயன்றபோது, கூட்ட நெரிசலில் நிலைதடுமாறி பேருந்தின் சக்கரத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்த அவரை மீட்டு சத்ரபதி சம்பாஜிநகர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த அந்த மாணவரின் மறைவு கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாணவரின் குடும்பத்திற்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.