மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வெயிலின் தாக்கம் உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், இரண்டு இளைஞர்கள் நகரின் முக்கியச் சாலையில் பைக்கில் சென்று கொண்டே குளித்த வீடியோ தற்போது இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
புனேவின் பிம்ப்ரி-சிஞ்ச்வாட் பகுதியில் உள்ள காலேவாடி பாட்டா என்ற இடத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள போக்குவரத்து நெரிசலான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, பின்னால் அமர்ந்திருந்த இளைஞர் ஒரு வாலி வாலியாகத் தண்ணீர் எடுத்து, ஓட்டுபவர் மீதும் தன் மீதும் ஊற்றி குளித்துக் கொண்டே சென்றுள்ளார்.
புனேவில் தற்போது வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி வருவதால், வெப்பத்தைத் தணிக்க அந்த இளைஞர்கள் இந்த வினோதமான வழியைக் கையாண்டுள்ளனர்.
இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் சிலர் ‘வெயிலுக்கு இது நல்ல ஐடியா’ என நகைச்சுவையாகக் கூறினாலும், சாலை பாதுகாப்பு ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓடும் வாகனத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது கவனத்தைச் சிதறடித்து பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
மேலும், ஈரமான உடைகள் மற்றும் நழுவும் இருக்கை காரணமாக வாகனத்தின் கட்டுப்பாடு இழக்கப்படலாம் என்றும், இது மற்ற வாகன ஓட்டிகளுக்கும் ஆபத்தானது என்றும் கூறப்படுகிறது.
மருத்துவர்கள் தரப்பில் பேசுகையில், இப்படித் திறந்தவெளியில் குளிப்பது வெயிலில் இருந்து தற்காலிகமாக வேண்டுமானால் நிவாரணம் அளிக்கலாமே தவிர, நீண்ட நேரத்திற்குத் தாகத்தையோ உடல் சூட்டையோ குறைக்காது எனத் தெரிவித்துள்ளனர்.
