ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள மானேசர் பகுதியில், மின்சார டிரான்ஸ்பார்மர் மீது எதிர்பாராத விதமாக உடல் பட்டதில் வாலிபர் ஒருவர் மின்சாரம் பாய்ந்து பரிசோதாபமாக உயிரிழந்தார்.
இந்த நெஞ்சைப் பதறவைக்கும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இரண்டு இளைஞர்கள் ஸ்கூட்டியில் வந்து ஒரு வீட்டின் முன் நிறுத்த முயன்றுள்ளனர்.
அப்போது ஓட்டி வந்த வாலிபர், அருகிலிருந்த மின்சார டிரான்ஸ்பார்மர் மீது தெரியாமல் உரசியுள்ளார். அடுத்த நொடியே மின்சாரம் அவர் உடலில் பாய்ந்ததில், வாலிபர் அப்படியே ஸ்கூட்டியுடன் ஒட்டிக்கொண்டார்.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பின்னால் அமர்ந்து வந்த நண்பர், என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த வாலிபரின் உடலில் இருந்து புகை கிளம்பி தீப்பிடிக்கத் தொடங்கியது.
அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயன்றனர். ஆனால், அதற்குள் உடல் கருகி அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் வைக்கப்பட்டிருந்த டிரான்ஸ்பார்மரே இந்த உயிரிழப்பிற்கு காரணம் எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஒரு சிறிய கவனக்குறைவு எப்படி ஒரு உயிரைப் பறித்துள்ளது என்பது அந்தப் பகுதி மக்களை உலுக்கியுள்ளது.
