இந்திய விமானப் போக்குவரத்துத் துறையில் பயணிகளின் உரிமைகள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒரு பெரிய விவாதம் எழுந்துள்ளது. இண்டிகோ (IndiGo) விமானத்தில் பயணித்த ஒருவரது விலையுயர்ந்த சூட்கேஸ் மோசமாகச் சேதமடைந்ததைத் தொடர்ந்து இந்த சர்ச்சை வெடித்தது.
அசுதோஷ் என்பவர் ‘X’ தளத்தில் பகிர்ந்த பதிவில், தனது சகோதரி இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தபோது சுமார் 8,000 ரூபாய் மதிப்புள்ள ‘Mokobara’ பிராண்ட் சூட்கேஸ் முற்றிலும் உடைந்த நிலையில் ஒப்படைக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இழப்பீடாக 4,500 ரூபாய் அல்லது சாதாரண ரக சூட்கேஸ் ஒன்றை வழங்குவதாக அந்நிறுவனம் கூறியுள்ளது. “நாட்டின் நுகர்வோர் பாதுகாப்பு என்பது ஒரு நகைச்சுவையாகிவிட்டது” என அவர் தனது பதிவில் ஆவேசமாகத் தெரிவித்துள்ளார்.
My sister flew with @IndiGo6E and they broke her bag. The bag is a Mokobara bag that I got at around 8k.
They are offering her a safari bag or 4500 INR as per their policy. What kind of policy is this. Consumer safety is a joke in this nation. @DGCAIndia ?? pic.twitter.com/SpLtqUWq4R— Ashutosh (@sonasingh46) April 28, 2026
இந்தப் பதிவு வைரலானதைத் தொடர்ந்து, நூற்றுக்கணக்கான பயணிகள் தங்கள் கசப்பான அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர். “பட்ஜெட் விமான நிறுவனங்கள் போட்டியின்றி ஏகபோகமாக செயல்படுவதால், பயணிகளின் உணர்வுகளை மதிக்காமல் லாபத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டுள்ளன” எனப் பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். சர்வதேச விமானங்களில் கூட இதே நிலைதான் நீடிப்பதாகப் பயணிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
விமான நிறுவனங்கள் ஆரம்பத்தில் குறைவான தொகையையே இழப்பீடாக வழங்கும் என்றும், அதனை ஏற்காமல் நுகர்வோர் நீதிமன்றம் அல்லது சிவில் ஏவியேஷன் ஒழுங்குமுறை அமைப்புகளிடம் புகார் அளித்தால் உரியத் தீர்வைப் பெறலாம் என்றும் அனுபவம் வாய்ந்த பயணிகள் அறிவுறுத்தியுள்ளனர். விமான நிலையங்களில் லக்கேஜ்களைக் கையாளும் விதம் குறித்துப் புகார் எழுந்திருப்பதையடுத்து, இது குறித்துத் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என டிஜிசிஏ-விற்கு (DGCA) கோரிக்கைகள் எழுந்துள்ளன.
