கேரளாவில் கடந்த பத்து ஆண்டுகளாகப் பினராயி விஜயன் தலைமையில் ஆட்சியில் இருந்த இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF), இம்முறை ஆட்சியை இழக்க நேரிடும் எனப் பெரும்பாலான எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

140 தொகுதிகளைக் கொண்ட கேரளா சட்டசபைக்கு நடந்து முடிந்த தேர்தலில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி (UDF) பெரும்பான்மை இடங்களைப் பிடித்து மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என ‘இந்தியா டுடே – ஆக்சிஸ் மை இந்தியா’ மற்றும் ‘பீப்பிள்ஸ் பல்ஸ்’ போன்ற முன்னணி நிறுவனங்கள் கணித்துள்ளன.

இந்தக் கணிப்புகளின்படி, காங்கிரஸ் கூட்டணி 75 முதல் 90 இடங்கள் வரை பெற்று ஆட்சிக்கட்டிலில் அமர அதிக வாய்ப்புள்ளது. ஆளும் இடதுசாரி கூட்டணி 50 முதல் 65 இடங்களை மட்டுமே பெற்று பின்னடைவைச் சந்திக்கும் என்றும், பாஜக கூட்டணி 0 முதல் 3 இடங்களை மட்டுமே பெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேரளாவில் வழக்கமாக ஒருமுறை இடதுசாரிகளும், அடுத்த முறை காங்கிரஸும் ஆட்சிக்கு வரும் ‘சுழற்சி முறை’ (Anti-incumbency) கடந்த முறை மாறியிருந்தாலும், இந்தத் தேர்தலில் மீண்டும் மக்கள் மாற்றத்தை விரும்பியுள்ளதையே இந்த முடிவுகள் காட்டுகின்றன.

பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்கள் ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பியுள்ள நிலையில், மே 4-ம் தேதி வெளியாகும் அதிகாரப்பூர்வ முடிவுகளில் ‘கை’ ஓங்குமா அல்லது ‘அரிவாள் சுத்தியல்’ தனது கோட்டையைத் தக்கவைக்குமா என்பது தெரிந்துவிடும்.