குமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள அண்டுகோடு பகுதியைச் சேர்ந்த 55 வயது தொழிலாளி ரவீந்திரன், பெண்கள் மற்றும் இளம்பெண்களைக் கண்டால் நிர்வாணமாக நின்று அநாகரிகமான முறையில் சைகை காட்டி அச்சுறுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவரது இந்த விபரீத நடவடிக்கைகளால் அதிருப்தி அடைந்த மனைவி ஏற்கனவே இவரைப் பிரிந்து சென்றுவிட்ட நிலையில், ரவீந்திரன் தொடர்ந்து இத்தகைய செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இதற்கு முன்பு போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த பின்னரும், அவர் தனது தவறான போக்கை மாற்றிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சமீபத்தில், அந்தப் பகுதியில் நடந்து சென்ற 25 வயது இளம்பெண் ஒருவரிடம் ரவீந்திரன் ஆபாசமாகப் பேசி, திடீரென தனது ஆடைகளைக் களைந்து நிர்வாணமாக நிற்க முயன்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்தப் பெண் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடிச் சென்று நடந்ததைக் கூறியுள்ளார்.

இதனைத் தட்டிக்கேட்ட பெண்ணின் மாமியாரிடமும் ரவீந்திரன் தகாத முறையில் நடந்து கொண்டதையடுத்து, காவல் துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் விரைந்து வந்த அருமனை போலீசார், ரவீந்திரனை மீண்டும் கைது செய்து சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.