மகாராஷ்ட்ரா மாநிலம் பீட் மாவட்டம் ஆஷ்டி தாலுக்காவில் மனிதாபிமானமற்ற முறையில் தந்தை ஒருவரே தனது இரு பெண் குழந்தைகளை உயிரோடு எரிக்க முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. குடும்பத் தகராறு காரணமாக இவரது மனைவி இவருடன் வாழ மறுத்துத் தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தனது பிஞ்சுக் குழந்தைகள் என்றும் பாராமல் அவர்கள் மீது எரிபொருளை ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். இந்த கொடூரச் செயல் அந்தப் பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த கோர சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த சிறுமிகள் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர், தப்பியோடிய அந்த கல்நெஞ்சம் படைத்த தந்தையைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பெற்ற மகள்களையே கொல்லத் துணிந்த தந்தையின் இந்த அரக்கத்தனமான செயல் பீட் மாவட்டம் முழுவதையும் உலுக்கியுள்ளது.
