மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலில் 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னெப்போதும் இல்லாத வகையில் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இந்தச் சூழலில், முதல்வர் பதவியிலிருந்து விலக மம்தா பானர்ஜி திட்டவட்டமாக மறுப்புத் தெரிவித்துள்ளார்.
மொத்தம் உள்ள 294 சட்டமன்றத் தொகுதிகளில், பாரதிய ஜனதா கட்சி 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை பெற்று மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2021-ஆம் ஆண்டு தேர்தலில் 38 சதவீதமாக இருந்த பாஜகவின் வாக்கு வங்கி, தற்போது 45 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேசமயம், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகக் குறைந்த இடங்களையே கைப்பற்றி பின்னடைவைச் சந்தித்துள்ளது.
முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிட்ட பவானிபூர் தொகுதியில், பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 15,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். நந்திகிராம் மற்றும் பவானிபூர் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, இரண்டிலுமே வெற்றி வாகை சூடியுள்ளார். இதன் மூலம் மேற்கு வங்கத்தின் அடுத்த முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தோல்வி குறித்து ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ள மம்தா பானர்ஜி , நாங்கள் தோற்கவில்லை. பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தின் உதவியுடன் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) முறைகேடு செய்துள்ளது. எனது வாழ்நாளில் இவ்வளவு மோசமான மற்றும் அருவருக்கத்தக்க தேர்தலை நான் பார்த்ததில்லை. மேலும், தேர்தல் ஆணையத்துக்கும் மாநில அரசுக்கும் இடையே நிலவி வந்த மோதல் போக்கின் உச்சமாக, தனது ராஜினாமா கடிதத்தை வழங்க ஆளுநர் மாளிகைக்குச் செல்ல முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
