ஆந்திர மாநிலத்தில், தனது மனைவி குண்டாக இருந்த காரணத்திற்காக அவரை கணவரே திட்டமிட்டு கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கிரண் என்பவர், தனது மனைவி பத்மஜாவின் உடல்வாகு பிடிக்காததாலும், அவர் தனது நடத்தையில் சந்தேகப்பட்டதாலும் இந்த கொடூர முடிவை எடுத்துள்ளார். போலீசில் சிக்காமல் இருக்க யூடியூப் பார்த்து கொலை செய்ய திட்டமிட்ட கிரண், ஆன்லைன் மூலம் 80 ஆயிரம் ரூபாய்க்கு விஷம் வரவழைத்து, அதை பால்கோவாவில் கலந்து மனைவிக்கு கொடுத்துள்ளார்.
விஷம் கலந்த ஸ்வீட்டை சாப்பிட்டு பத்மஜா மயங்கிய நிலையில், கிரண் தலையணையால் அவர் முகத்தை அழுத்தி மூச்சுத்திணற வைத்து கொலை செய்துள்ளார். பின்னர் எதுவுமே தெரியாதது போல் அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். ஆனால், பத்மஜாவின் மரணத்தில் சந்தேகம் அடைந்த போலீசார் கிரணை பிடித்து விசாரித்தபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.
தற்போது போலீசார் கிரணை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மனைவியின் உருவத்தை கேலி செய்து கணவரே கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
