உத்தர பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், மது போதையில் ஏற்பட்ட தகராறில் தென்கொரியாவைச் சேர்ந்த தனது காதலனை கத்தியால் குத்திக்கொலை செய்த மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை போலீசார் திங்கள்கிழமை கைது செய்தனர். தென்கொரியாவைச் சேர்ந்த 47 வயதான டக் ஹீயூ, நொய்டாவில் உள்ள தனியார் செல்போன் நிறுவனத்தில் கிளை மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவர் மணிப்பூரைச் சேர்ந்த லுஞ்சீனா பமாய் (22) என்ற பெண்ணுடன் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒரே வீட்டில் கணவன் – மனைவி போன்று வசித்து வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் , இருவரும் அமர்ந்து மது அருந்தியபோது டக் ஹீயூ அதிக அளவில் மது குடித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த டக் ஹீயூ காதலியைத் தாக்கியதால், தற்காப்பிற்காக அருகில் இருந்த கத்தியை எடுத்து லுஞ்சீனா குத்தியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ‘ காவல் நிலைய போலீசார், உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாகவே மது போதையில் டக் ஹீயூ தன்னை துன்புறுத்தி வந்ததாகவும், கொலை செய்யும் நோக்கம் தனக்கு இல்லை என்றும் லுஞ்சீனா வாக்குமூலம் அளித்துள்ளார். இருப்பினும், கொலை வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 14 நாள் சிறையிலடைத்தனர்.

வெளிநாட்டுப் பிரஜை கொல்லப்பட்டதால், இது குறித்து தென்கொரிய தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன்,அவரது உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த துயரச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.