1960களில், “தூக்கம் இல்லாமல் மனிதன் எவ்வளவு நாள் வாழ முடியும்?” என்ற கேள்விக்கான பதிலைத் தேடும் முயற்சியில், அமெரிக்காவில் 17 வயது பள்ளி மாணவன் ராண்டி கார்ட்னர் தனது உடலை ஒரு பரிசோதனைக்காக அர்ப்பணித்தார். எந்த காபி, மருந்து பொருட்களும் எடுத்துக்கொள்ளாமல், முழுமையான கட்டுப்பாட்டுடன் அவர் 11 நாட்கள் 24 நிமிடங்கள் தூங்காமல் இருந்தார்.
அந்த காலத்தில் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவர் டாக்டர் வில்லியம் டிமெண்ட் மற்றும் நரம்பியல் நிபுணர்கள் தொடர்ந்து அவரை கண்காணித்தனர். ஆரம்பத்தில் சாதாரணமாக இருந்தாலும், சில நாட்கள் கழித்து அவரது நினைவாற்றல் குறைவு, கவனக்குறைவு, மனநிலை மாற்றம், மாயக் காட்சிகள் போன்ற கடுமையான விளைவுகள் வெளிப்பட்டன. மூளை “மைக்ரோ ஸ்லீப்” எனப்படும் சில வினாடிகள் நீளமான தற்காலிக உறக்க நிலைக்கு சென்றது கண்டறியப்பட்டது.
11-வது நாளில் அவர் கடுமையான சோர்வு, மனஅழுத்தம் காரணமாக உடல் முழுவதும் பலவீனமடைந்த நிலையில் இருந்தார். பின்னர் அவர் 15 மணி நேரம் இடைவிடாமல் உறங்கினார். அதன்பின் சில நாட்களில் முழுமையாக மீண்டார். இந்த பரிசோதனையில், எந்தவித நிலையான உடல்நலப் பிரச்சனையும் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறவில்லை என்றாலும், நீண்டநாள் தூக்கமின்மையின் ஆபத்தை வெளிப்படுத்திய முக்கியமான சம்பவமாக இது குறிப்பிடப்படுகிறது.
இந்த நிகழ்வு மனித உடலுக்கு தூக்கம் எவ்வளவு அவசியமானது என்பதை உலகத்துக்கு உணர்த்தியது. 1 நாள் தூக்கமின்றி இருப்பது கூட மூளையின் செயற்பாடு, மனநிலை, நினைவாற்றல் ஆகியவற்றில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ராண்டி கார்ட்னரின் பரிசோதனை நிரூபித்தது. இன்றும் அவர் மேற்கொண்ட இந்த 11 நாள் தூக்கமின்மை பரிசோதனை தான் விஞ்ஞான வரலாற்றில் மிக நீண்ட, நம்பகமான மனித ஆய்வாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
