தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தலில் வெறும் 47 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டதால், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சி.வி.சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் கலகக் குரல் எழுப்பியுள்ளனர். இதனால் அதிமுக தற்போது ஈபிஎஸ் அணி, எஸ்பி வேலுமணி அணி என இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.
மேலும், சட்டப்பேரவையில் ஆளும் அரசின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் தவெக-வுக்கு ஆதரவாக வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பு 25 எம்எல்ஏக்கள் வாக்களித்ததால், ஆத்திரமடைந்த ஈபிஎஸ் 26 பேரின் கட்சிப் பதவிகளைப் பறித்துள்ளார். இவர்களுக்கு எதிராக கேபி முனுசாமி ஆளுநரிடமும், தளவாய் சுந்தரம் சபாநாயகரிடமும் கடிதம் கொடுத்துள்ளனர்.
அதிமுகவில் இந்த அதிரடி அரசியல் திருப்பங்கள் நடந்து வரும் வேளையில், கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான செம்மலை அதிமுகவிலிருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தலுக்குப் பிறகு நடக்கும் நிகழ்வுகள் மிகுந்த மன வேதனையைத் தருகிறது; உட்கட்சி சண்டையால் அதிமுக அசிங்கப்படுகிறது என்று ஆங்கில நாளிதழ்கள் பரிகாசம் செய்யும் அளவிற்கு நிலைமை போய்விட்டது” என ஆதங்கப்பட்டுள்ளார்.
“கற்பூரம் கரையலாம், கட்சி கரையலாமா! நோகுதய்யா, மனசு நோகுதய்யா” என்று குறிப்பிட்டுள்ள அவர், எம்ஜிஆர் மற்றும் அம்மா ஆகிய இரு பெரும் தலைவர்களின் ஆன்மாவிடம் மன்னிப்புக் கேட்டு, கனத்த இதயத்தோடு கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
