நாக்பூர்-ஜபல்பூர் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த துயர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தைச் சேர்ந்த கியார்சி அமித் யாதவ் (வயது 30), தனது கணவர் அமித் யாதவுடன் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தபோது, மோர்ஃபாட்டா அருகே தியோலாபர் காவல் நிலைய வரம்பில் வேகமாக வந்த லாரி மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பலமுறை உதவி கோரியும் யாரும் வந்து உதவாததால், உதவியற்ற நிலையில் இருந்ததாக அமித் யாதவ் கூறினார். கடந்த பத்து ஆண்டுகளாக தம்பதியினர் நாக்பூரின் கோரடிக்கு அருகிலுள்ள லோனாராவில் வசித்து வந்துள்ளனர்.

மனைவியின் உடலை சொந்த ஊரான மத்தியப் பிரதேசத்துக்கு கொண்டு செல்ல வாகனமோ, உதவியோ கிடைக்காததால், மனமுடைந்த அமித் தனது மனைவியின் உடலை இருசக்கர வாகனத்தில் பத்திரமாக கட்டி வைத்து கிளம்பினார். இந்த துயர காட்சி சாலையில் பயணித்தவர்களை மட்டுமல்ல, சமூக ஊடகங்களிலும் பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

வைரலான வீடியோவில், அமித் மனைவியின் உடலை முதுகில் கட்டிக்கொண்டு மோட்டார் சைக்கிளை ஓட்டிச் செல்வது தெளிவாகப் பதிவாகியுள்ளது. ஆரம்பத்தில் யாரும் உதவிக்கு முன்வராத நிலையில், பின்னர் சிலர் தலையிட முயன்றபோதும், பிரச்சனைக்கு பயந்து அமித் நிறுத்த மறுத்ததாகக் கூறப்படுகிறது.

“>

 

நியூஸ்18 வெளியிட்ட தகவலின்படி, சம்பவ இடத்தில் இருந்த நெடுஞ்சாலை போலீசார் அவரை நிறுத்த முயன்றும், அவர் தொடர்ந்து சென்று கொண்டிருந்தார். சில தூரம் சென்றபின் போலீசார் அவரை நிறுத்தி, கியார்சியின் உடலை கைப்பற்றினர். பின்னர் அது நாக்பூரிலுள்ள மாயோ மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது.

இந்த சம்பவம், சாலை விபத்துகளுக்குப் பிறகு பாதிக்கப்பட்டோருக்கு உடனடி உதவி வழங்கப்படாத நிலையில், மனிதாபிமானம் எவ்வாறு குறைந்து வருகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.