தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கி, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டி.கே.ஆர். கமான் பகுதியில், ஜொமாட்டோ டெலிவரி மேன் சையத் ஃபர்ஹான் தண்ணீர் நிரம்பிய திறந்த வடிகாலில் விழுந்து உயிர் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில், அவரது பைக் சேதமடைந்ததுடன், ரூ.20,000 மதிப்புள்ள செல்போனும் இழந்துவிட்டதாக கூறப்படுகிறது. உள்ளூர்வாசிகள் அவரை மீட்டனர்.

இந்த சம்பவத்துக்குப் பிறகு, தெலுங்கானா கிக் மற்றும் பிளாட்ஃபார்ம் தொழிலாளர் சங்கம் (TGPWU) ஜொமாட்டோ நிறுவனத்தை கடுமையாக விமர்சித்துள்ளது. மோசமான வானிலை நிலைமைகளிலும், வெறும் ரூ.10 அல்லது ரூ.15 மழை போனஸை வழங்கி ரைடர்களை பணிக்கு அனுப்பும் நிறுவனங்கள், தொழிலாளர் பாதுகாப்பை விட லாபத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றன என சங்கத் தலைவர் ஷேக் சலாவுதீன் குற்றம்சாட்டினார்.

“>

 

மேலும், ஃபர்ஹானுக்கு ஏற்பட்ட இழப்பை ஜொமாட்டோ ஈடு செய்ய வேண்டும் என்றும், தொழிலாளர்களின் உயிரைப் பணயம் வைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஹைதராபாத் மாநகராட்சியை கேட்டுக்கொண்டார்.

“>

 

சந்தோஷ் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபர்ஹான், “தண்ணீர் தேங்கியதால் வடிகால் இருப்பதை பார்க்க முடியவில்லை. எந்த எச்சரிக்கை பலகையும் இல்லை. என் பைக், செல்போன் இரண்டும் சேதமடைந்தன. நான் 1.4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக்கை கடனில் வாங்கி தவணை செலுத்தி வருகிறேன்.

இது எனது ஒரே வருமானம். எனக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் உள்ளது. தயவுசெய்து என் பிரச்சனையை ஜொமாட்டோவிடம் எடுத்துச் செல்லுங்கள்” என்று வீடியோ செய்தியில் கூறியுள்ளார். இந்த சம்பவம் குறித்து ஜொமாட்டோ இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை.