மத்திய கிழக்கில் நிலவி வரும் பதட்டமான சூழ்நிலையிலும், இந்தியாவில் பால் மற்றும் எரிபொருள் விநியோகம் எந்தத் தடங்கலும் இன்றி சீராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் பால் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என்றும், அவற்றின் விலைகள் நிலையாக இருப்பதாகவும் கால்நடை வளர்ப்பு அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.

அதேபோல், சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்த போதிலும், பெட்ரோலிய அமைச்சகத்தின் முறையான திட்டமிடலால் உள்நாட்டில் எரிபொருள் மற்றும் பேக்கேஜிங் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்படவில்லை. கடல்சார் போக்குவரத்தைப் பொறுத்தவரை, கப்பல் காப்பீட்டுக்கான மத்திய அரசின் ஆதரவு விலைகளை நிலைப்படுத்த உதவியுள்ளது.

ஹோர்முஸ் பகுதியில் உள்ள இந்தியக் கப்பல்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், கச்சா எண்ணெய் ஏற்றி வரும் கப்பல்கள் தடையின்றி தாயகம் திரும்பி வருகின்றன.

மேலும், வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியர்களின் நலன் காக்க வெளியுறவு அமைச்சகம் அந்தந்த நாட்டுத் தூதரகங்களுடன் தொடர்ந்து பேசி வருவதாகவும், வர்த்தக உறவுகளை மேம்படுத்த அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.