ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் நகரில் உள்ள ஒரு சர்க்கஸில், புலி ஒன்று திடீரென பார்வையாளர்கள் பகுதிக்குள் குதித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சர்க்கஸ் அரங்கில் புலிகளின் சாகச நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது, அங்கிருந்த பாதுகாப்பு வலை எதிர்பாராதவிதமாக சரிந்து விழுந்தது. இதனால் மிரட்சியடைந்த ஒரு புலி, மேடையைத் தாண்டி மக்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் பாய்ந்தது.
இதைக் கண்ட பார்வையாளர்கள் பயத்தில் அலறியடித்து ஓட முயன்றதால் அந்த இடமே போர்க்களமானது. உடனடியாகச் செயல்பட்ட பயிற்சியாளர்கள், அந்தப் புலியை லாவகமாகப் பிடித்துக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றாலும், அங்கிருந்த குடும்பங்களும் குழந்தைகளும் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சர்க்கஸில் வனவிலங்குகளைப் பயன்படுத்துவது மற்றும் பார்வையாளர்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் மீண்டும் உலக அளவில் வலுப்பெற்றுள்ளன.
