மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு குறித்து ஆலோசிப்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி நாளை அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் தலைமைச் செயலாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்த உள்ளார்.
இந்தப் போரினால் இந்தியாவில் ஏற்படக்கூடிய பொருளாதாரத் தாக்கம், கச்சா எண்ணெய் இறக்குமதி மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது. தேசப் பாதுகாப்பு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்துவது இந்த ஆலோசனையின் முக்கிய நோக்கமாகும்.
இருப்பினும், தேர்தல் நடைபெற உள்ள தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில முதல்வர்கள் மட்டும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் இந்த விலக்கு அளிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
சர்வதேசப் போர் சூழல் காரணமாக இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் வருமா அல்லது மாற்று ஏற்பாடுகள் என்ன என்பது குறித்த முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்திற்குப் பிறகு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
