சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகத் திகழும் கோவாவில், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவருக்கு நேர்ந்த பயங்கர அனுபவம் தற்போது இணையத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கலங்குட் கடற்கரையில் (Calangute Beach) உள்ள ஒரு ‘ஷேக்’ (Beach Shack) கடையில், கடல் குளியலுக்குப் பிறகு அங்கிருந்த சன் பெட்டில் (Sunbed) அமர்ந்த பெங்களூரு சுற்றுலாப் பயணியிடம் ஊழியர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தச் சாதாரண வாய்த்தகராறு கைக்கலப்பாக மாற, சுமார் 15 முதல் 20 ஊழியர்கள் ஒன்று சேர்ந்து அந்தச் சுற்றுலாப் பயணியை இரும்பு ராட்கள் மற்றும் பிளாஸ்டிக் பைப் மூலம் கொடூரமாகத் தாக்கியுள்ளனர்.
Viral Video of a #Bengaluru tourist assaulted by shack staff for sitting on sun beds at Calangute beach #Goa pic.twitter.com/U2Wnnh6RWI
— Siraj Noorani (@sirajnoorani) March 25, 2026
இதில் பலத்த காயமடைந்த அந்த நபர், ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, கோவா சுற்றுலாத்துறை அமைச்சர் ரோகன் காவுண்டே (Rohan Khaunte) கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“கோவா வரும் விருந்தினர்களைத் தாக்குவது ‘அதிதி தேவோ பவ’ கொள்கைக்கு எதிரானது” என்று கூறியுள்ள அவர், சம்பந்தப்பட்ட ஷேக் கடையின் உரிமத்தை உடனடியாக ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார். மேலும், தாக்குதலில் ஈடுபட்ட ஷேக் ஊழியர்கள் இருவரைப் போலீஸார் கைது செய்துள்ள நிலையில், தலைமறைவாக உள்ள மற்றவர்களைத் தேடி வருகின்றனர்.
