ஓணம் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடி வரும் நிலையில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அதிர்ச்சியூட்டும் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பள்ளியில் பயிலும் 7 பேர் கொண்ட மாணவர் குழு, புதியதாக கட்டுமான பணியில் இருந்த வீடொன்றில் சேர்ந்து ஓணம் கொண்டாடினர். கொண்டாட்டத்தின் போது, அவர்கள் மது வாங்கி, ஒருவருக்கொருவர் போட்டி போட்டு அதிகமாக குடித்துள்ளனர். இந்த நேரத்தில், அந்த மாணவர்களில் ஒருவன், மதுபானத்தில் தண்ணீர் கலந்து குடிக்காமல் நேரடியாக குடித்ததன் காரணமாக திடீரென மயங்கி விழுந்துள்ளார்.

அந்த மாணவர் சுயநினைவிழந்து கிடப்பதை கண்ட மற்ற மாணவர்கள் அனைவரும் பதறி, அவசரமாக அங்கிருந்து ஓடிவிட்டனர். ஆனால், ஒரு மாணவர் மட்டும் துணிச்சலாக இருந்து, தன் நண்பரைக் காப்பாற்ற வேண்டும் என போலீசாரைத் தொடர்பு கொண்டார். திருவனந்தபுரம் அருங்காட்சியக காவல் நிலையம் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, மாணவரை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தது. தற்போது அந்த மாணவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சிறுவயதில் இருந்தே மாணவர்கள் மதுக்கடைகளில் எப்படி மது வாங்க முடிந்தது? அல்லது வேறு வழிகளில் அது எவ்வாறு அவர்களுக்கு கிடைத்தது? என்பதற்கான விசாரணையை போலீசார் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றனர்.