உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் புகைப்படக் கடை நடத்தி வந்த உதித் என்பவர் (வயது 26), கடந்த 2 ஆண்டுகளாக ஒரு பெண்ணை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்த அந்தப் பெண், பின் மறுத்ததோடு, உதித் தனது மொபைலை பறித்ததாக போலீசில் புகார் செய்துள்ளார். இதையடுத்து போலீசார் உதித்தை கைது செய்து பத்தாயிரம் ரூபாய் பறிமுதல் செய்தனர். மனமுடைந்த உதித், தனது கடையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலைக்கு முன் அவர் எழுதி வைத்த கடிதத்தில், “இனி என்னால் தாங்க முடியாது. என் சாவுக்கு என் காதலியும், அவளது பெற்றோர்களும் முழுமையாகவே பொறுப்பாளிகள். அவர்கள் பொய்யான வழக்குகள் பதித்து எனது வாழ்க்கையை சிதைத்துவிட்டார்கள்”. என் குடும்பத்தினரை இதற்குள் இழுத்தனர்.
நான் அவளுடன் திருமணம் செய்து கொள்வேன் என நம்பியதற்காகவே இவ்வளவு துன்பம். என் மரணத்திற்குப் பிறகு என் குடும்பத்தினரை யாரும் துன்புறுத்தக்கூடாது” எனக் குறிப்பிட்டிருந்தார். தாயாரின் கண்ணீரும், தந்தையின் குற்றச்சாட்டுகளும் இந்த மரணத்தை மேலும் கோரமாக்கியுள்ளது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதலில் தோல்வியால் ஒரு இளைஞர் தனது உயிரை மாய்த்திருப்பது, இளைய தலைமுறையின் மனநிலை மற்றும் சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.
மேலும், இக்காரணமாக காவல்துறையின் நடவடிக்கைகள் மீதும் கேள்விகள் எழுந்துள்ளன. தற்கொலைக் குறிப்பு மற்றும் குடும்பத்தினரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது.
