கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த விட்டல் என்ற வாடகை கார் ஓட்டுநர், ஏற்கனவே மூன்று திருமணங்கள் செய்து பிரிந்துள்ளவராக தெரியவந்துள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வனஜாக்சி (35) என்ற பெண்ணுடன் லிவ்-இன் உறவில் வாழ ஆரம்பித்தார். வனஜாக்சிக்கும் இதற்கு முன்னர் இரண்டு திருமணங்கள் நடந்து பிரிந்து தனியாக வாழ்ந்து வந்தார்.

சில வருடங்கள் அமைதியாக சென்ற பின்னர், விட்டலுக்கு வந்த குடிப்பழக்கம், அவர்களது வாழ்வில் முற்றுப்புள்ளி வைத்தது. குடித்துவிட்டு அடிக்கிறார் என்ற காரணத்தால் வனஜாக்சி அவரை விட்டு பிரிய முடிவு செய்தார்.

அந்த நிலையில், வனஜாக்சி, மாரியப்பா என்ற கன்னட அமைப்பின் உறுப்பினருடன் நட்பு வளர்த்தார். கோவிலுக்கு காரில் சென்றபோது, விட்டல் அவர்களை துரத்தி போய், சிக்னலில் அவர்களுடைய காரை வழிமறித்து, பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். காரில் இருந்தவர்கள் முயற்சி செய்து தப்ப முயன்றாலும், வனஜாக்சி மீது நேரடியாக பெட்ரோல் ஊற்றி, லைட்டரால் தீ வைத்துள்ளார். அவரை காப்பாற்ற முயன்ற ஒரு பொதுமகனும் தீக்காயம் அடைந்துள்ளார்.

இந்த பயங்கர சம்பவத்தில் 60 சதவீதம் தீக்காயம் அடைந்த வனஜாக்சி, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவத்துக்கு காரணமான விட்டல், சற்று தீக்காயம் அடைந்த நிலையில் இருந்தும், 24 மணி நேரத்தில் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பெங்களூரு துணை ஆணையாளர் நாராயணா, வனஜாக்சியை காப்பாற்ற முனைந்த நபரை பாராட்டி, இந்த கொடூர குற்றத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என தெரிவித்துள்ளார்.