கர்நாடக மாநிலம் ஹுப்பாலியில் கணவரால் கைவிடப்பட்டு ஆதரவற்ற நிலையில் இருந்த 35 வயதுப் பெண் ஒருவரை, கடந்த ஜனவரி 9-ம் தேதி மூன்று பேர் கொண்ட கும்பல் ஆட்டோவில் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது. அந்தப் பெண்ணை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்துச் சித்திரவதை செய்ததோடு, அந்த கொடூரத்தைச் செல்போனில் வீடியோவாகவும் எடுத்துள்ளனர். அந்த வீடியோவை அவர்கள் சமூக வலைதளங்களில் பகிர, அதைக் கண்ட உள்ளூர் மக்கள் கொதித்தெழுந்தனர். வீடியோவில் இருந்த நபர்களை அடையாளம் கண்ட மக்கள், குற்றவாளிகளில் இருவரைப் பிடித்து மொட்டை அடித்து, மின் கம்பத்தில் கட்டி வைத்து தர்ம அடி கொடுத்துள்ளனர்.

​தகவலறிந்து வந்த போலீசார், மின் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த குற்றவாளிகளை மீட்டு கைது செய்தனர். இந்தச் சம்பவத்தில் சிவானந்தா, கணேஷ் மற்றும் வீடியோவை பகிர்ந்த பிரதீப் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு வினோதமான திருப்பமாக, தங்களை மின் கம்பத்தில் கட்டி வைத்து அடித்ததாகக் குற்றவாளிகள் கொடுத்த புகாரின் பேரில், அவர்களைத் தாக்கிய உள்ளூர் நபர்கள் நான்கு பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர். ஆதரவற்ற ஒரு பெண்ணுக்கு நடந்த இந்த அநீதியும், அதற்கு மக்கள் கொடுத்த தண்டனையும் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.