இப்போதெல்லாம் பசி எடுத்தால் போதும், உடனே போனை எடுத்து ஜொமாட்டோ அல்லது ஸ்விக்கியில் ஆர்டர் செய்வது வழக்கமாகிவிட்டது. அதிலும் ஆஃபர் மற்றும் டிஸ்கவுண்டுகளைப் பார்த்தால், சிக்கன் பிரியாணி முதல் மட்டன் பிரியாணி வரை ஒரு பிடி பிடிக்காமல் விடுவதில்லை. ஆனால், அப்படி ஆசையாக ஆர்டர் செய்த ஒருவருக்குக் கிடைத்த பார்சல், இப்போது இந்தியாவையே அதிர வைத்துள்ளது. கான்பூரைச் சேர்ந்த நபர் ஒருவர் ஜொமாட்டோ மூலம் பிரபல ஹோட்டலில் மட்டன் பிரியாணி ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பார்சலைத் திறந்து பார்த்தபோது, அதில் இருந்த கறித் துண்டுகள் மட்டன் போல இல்லாமல், அச்சு அசலாக நாய் கால் எலும்பு போலவே இருந்ததைக் கண்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

​”மட்டன் காசு கொடுத்துட்டு நாய் கறி சாப்பிடுறதா?” என ஆத்திரமடைந்த அந்த நபர், உடனடியாக அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட, அது இப்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “நாங்க கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற காசுக்கு இதுதான் மரியாதையா?” என அவர் ஹோட்டல் நிர்வாகத்துடன் மல்லுக்கட்டும் வீடியோ இணையத்தை அதிர வைக்கிறது. இது உண்மையிலேயே நாய் கறியா அல்லது ஆட்டுக்கறி தானா என்பது குறித்து போலீசார் இப்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஹைதராபாத் போன்ற நகரங்களில் ஏற்கனவே இது போன்ற புகார்கள் வந்த நிலையில், இப்போது கான்பூர் சம்பவம் அசைவ பிரியர்களைப் பீதியில் ஆழ்த்தியுள்ளது.