திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், கோவில்களில் கூட்டம் அதிகமாக இருக்கும்போது, தரிசனத்திற்காகக் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் 3 முதல் 4 மணி நேரம் காத்துக் கிடக்கும் சூழ்நிலை உள்ளதாகக் குறிப்பிட்டார். எனவே, சாதாரண பக்தர்கள் எளிதாகச் சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு, ஊழல் உள்ளிட்ட விவகாரங்களால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளதாகவும், மக்கள் பவர்கொடுத்தால் தற்போதைய அரசு பவர் கட்டை மட்டுமே மக்களுக்கு வழங்குகிறது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.