தூத்துக்குடியில் காங்கிரஸ் நிர்வாகி காமராஜ் என்பவர் மீது திமுக ஆதரவாளர்கள் கொடூரமான தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தமிழ்நாடு காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் குற்றம் சாட்டியுள்ளார்.

காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மற்றும் ராகுல் காந்தி குறித்து திமுக மாவட்டச் செயலாளரும் எம்.எல்.ஏ-வுமான அனிதா ராதாகிருஷ்ணன் பேசிய அவதூறு கருத்துக்களைக் கண்டித்து நடைபெற்ற அமைதியான போராட்டத்தில் காமராஜ் கலந்து கொண்டதே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

<a href="http://

“> 

இத்தாக்குதலில் காமராஜின் ஆட்டோ ரிக்ஷா அடித்து நொறுக்கப்பட்டு, அவரது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் மாணிக்கம் தாகூர் சாடியுள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொண்டு வரும் அனிதா ராதாகிருஷ்ணன், அரசியல் ரீதியாகப் பதிலளிக்க முடியாமல் காங்கிரஸ் தொண்டர்களை மிரட்டி வருவதாகவும், உதயநிதி ஸ்டாலின் தலைமையில் வன்முறையும் மிரட்டலும் திமுகவின் அரசியல் கலாச்சாரமாக மாறி வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி மாநகர் காங்கிரஸ் தலைவர் சஹாயராஜ் உடனடியாகக் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். காமராஜைக் கொலை செய்ய முயன்றவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தூத்துக்குடி காங்கிரஸ் தொண்டர்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ள மாணிக்கம் தாகூர், திமுகவின் இந்த ரவுடித்தனத்தை எதிர்த்து காங்கிரஸ் உறுதியாகப் போராடும் என்றும் தெரிவித்துள்ளார்.