தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தி.மு.க, அ.தி.மு.க மற்றும் பா.ஜ.க ஆகிய கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக, அ.தி.மு.க ஏற்கனவே தனது முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ள நிலையில், தி.மு.க மற்றும் பிற கட்சிகளும் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கும் பணியில் இறங்கியுள்ளன.
இந்த முறை நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முதல்முறையாகப் போட்டியிடுவதால், தேர்தல் களம் நான்கு முனைப் போட்டியாக மாறி மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தமிழக வெற்றிக் கழகம் தனது தேர்தல் அறிக்கையை மக்கள் விருப்பத்திற்கு ஏற்ப தயாரிக்க முடிவு செய்துள்ளது. இதற்காக ‘tvkmanifesto2026.com’ என்ற புதிய இணையதளத்தை அக்கட்சித் தலைவர் விஜய் இன்று மாலை தொடங்கி வைத்துள்ளார்.
“மக்களின் ஆட்சி மக்களின் பரிந்துரைகளால் அமைய வேண்டும்” என்ற நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் தளத்தின் வாயிலாக, பொதுமக்கள் தங்கள் ஆலோசனைகளையும் கோரிக்கைகளையும் நேரடியாகத் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
