கரூர் மாவட்ட அரசியலில் நீண்டகாலமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. வரும் தேர்தலில் கரூர் தொகுதியைக் கைப்பற்ற விஜயபாஸ்கரும், தனது கோட்டையைத் தக்கவைக்க செந்தில் பாலாஜியும் இப்போதே காய்களை நகர்த்தத் தொடங்கிவிட்டனர். இந்த மோதலின் ஒரு பகுதியாக, கரூர் மாவட்ட அதிமுக மருத்துவ அணிச் செயலாளரான டாக்டர் தர்மேந்திரன் திடீரென செந்தில் பாலாஜி முன்னிலையில் திமுகவில் இணைந்துள்ளது அதிமுக வட்டாரத்தில் பெரும் இடியைப் போல இறங்கியுள்ளது. கடந்த சில நாட்களாகவே இரு தரப்பும் மாற்றி மாற்றி முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் இழுத்து வருவதால் கரூர் மாவட்டமே இப்போது அரசியல் போர்க்களமாக மாறியிருக்கிறது.

​நிர்வாகிகள் ஒரு கட்சியில் இருந்து மற்றொரு கட்சிக்குத் தாவுவது சாதாரண விஷயம் என்றாலும், விஜயபாஸ்கரின் நம்பிக்கைக்குரிய நபர்கள் திமுக பக்கம் செல்வது அவருக்குப் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. செந்தில் பாலாஜி சிறையில் இருந்து வெளிவந்த பிறகு தனது பழைய பாணியில் அரசியலைத் தொடங்கிவிட்டாரோ என மற்ற கட்சியினர் யோசிக்கும் வகையில் இந்த ‘ஆள் பிடிப்பு’ படலம் தீவிரமடைந்துள்ளது. ஒரு பக்கம் செந்தில் பாலாஜியின் அதிரடி, மறுபக்கம் விஜயபாஸ்கரின் பதிலடி என கரூர் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கிவிட்டது. இந்தச் சம்பவத்தால் அதிர்ச்சியில் உறைந்துள்ள விஜயபாஸ்கர் தரப்பு, இதற்குப் போட்டியாக திமுகவில் இருந்து யாரைப் பிரிக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.