தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பருவ மழை திடீரென பல்வேறு மாவட்டங்களில் பரவலாக பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, அத்தியாவசிய பொருள்களின் விலைகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, காய்கறி விலைகள் உயர்ந்திருப்பதால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கின்றது, தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை அதிகாலை கரையைக் கடக்கலாம் என கூறியுள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும், மக்கள் கவனமாக இருக்க வேண்டியது அவசியம் எனவும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில், மதுரை ஆதீனம் வீரபாண்டிய கட்டபொம்மனின் 225வது நினைவு நாளை முன்னிட்டு மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய மதுரை ஆதீனம், இன்றைய தலைமுறை சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவில் வைத்து மரியாதை செலுத்த வேண்டும் என்றும், இளைஞர்களுக்கு விடுதலைப் போராட்ட வீரர்களின் தியாகத்தைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த அரசு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பருவம் தவறிய மழைக்கு தமிழக மக்களிடையே பக்தி குறைவாக இருப்பது ஒரு காரணம் என்றும், கோவில் நிலங்களில் குத்தகைதாரர்கள் குத்தகை தொகையை செலுத்துவதில்லை என்பதும் இதற்கான முக்கியமான காரணம் என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார். மேலும் தமிழக மக்களிடையே பக்தி குறைந்தது தான் பருவமழை தவறி செய்வதற்கு காரணம் என்று மதுரை ஆதீனம் கூறியது பேசும் பொருளாக மாறி உள்ளது.
