சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, வரவிருக்கும் தேர்தல் தமிழகத்திற்கு மிகவும் முக்கியமானது என்றும், கடந்த சில நாட்களில் தேர்தல் களம் பாஜகவிற்கு சாதகமாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார். தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் தெளிவான விளக்கம் அளித்த பிறகும், முதல்வர் ஸ்டாலின் தேவையில்லாத பிரச்சனைகளைக் கிளப்பி வருவதாக அவர் விமர்சித்தார்.

தோல்வி பயம் காரணமாகவே திமுகவினர் சம்பந்தமில்லாமல் பேசி வருவதாகவும், அவர்களின் திராவிடக் கொள்கை முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர்காரசாரமாகக் குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை விமர்சித்த எச்.ராஜா, அவர் அரசியலில் இருந்து ஓய்வு பெற்றால் ஒட்டுமொத்த நாடும் நன்றி சொல்லும் என்றும், அவர் பேசுவதெல்லாம் பொய் என்றும் சாடினார்.

காரைக்குடி எம்.எல்.ஏ மாங்குடி தொகுதிக்காக எதையும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டிய அவர், பிரேமலதா விஜயகாந்த் தமிழகத்தில் நிலவும் பாலியல் வன்கொடுமைகள் குறித்து முதல்வர் முன்னிலையில் பேசியதை வரவேற்பதாகத் தெரிவித்தார். தமிழகத்தில் 1,700 பெண் குழந்தைகள் பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இது ஒருமுக்கியப் பிரச்சனை என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.