தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி பொறுப்பேற்று 35 நாட்கள் கடந்துள்ள நிலையில், மாநிலத்தில் நிகழ்ந்துள்ள குற்றச்சம்பவங்கள் குறித்து நயினார் நாகேந்திரன் காட்டமாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், “ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் மேடைக்கு மேடை நின்று ‘ப்ரோ.. அங்கிள்.. அங்கிள்!’னு கொஞ்சிப் பேசினீங்களே, இப்போ அந்த வாய் ஏன் திறக்க மாட்டேங்கறீங்க?” என்று முதலமைச்சர் விஜய்யை நேரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 3 வயது குழந்தை முதல் 80 வயது முதியவர்கள் வரை பாதிக்கப்படும் கொடூர சம்பவங்கள் குறித்து முதலமைச்சர் மௌனம் காப்பது அதிர்ச்சியளிப்பதாக அவர் சாடியுள்ளார்.
சூலூர் மற்றும் நெல்லை மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த தொடர் பாலியல் வன்கொடுமைகள் குறித்து புள்ளிவிவரங்களுடன் பேசிய நயினார் நாகேந்திரன், முதலமைச்சரின் அன்றாட செயல்பாடுகள் குறித்தும் விமர்சித்துள்ளார். “முதலமைச்சர் காலையில் 10 மணிக்கு வருகிறார், மாலை 5 மணிக்கு கிளம்புகிறார், டிபன் கேரியரை எடுத்துட்டு சாப்பிடுகிறார்; ஆனா, இந்த கொடுமைகள் குறித்து வாயே திறக்க மாட்டேங்கிறார்” என்று குற்றம் சாட்டிய அவர், முதலமைச்சர் திரையுலக பிரபலங்களுடன் நேரம் செலவிடுவதில் காட்டும் ஆர்வத்தை மக்கள் பிரச்சனைகளை கவனிக்க ஏன் காட்டவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
