ஐபிஎல் 2026 தொடருக்காக  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணியில் இணைந்துள்ள அர்ஜுன் டெண்டுல்கர், பயிற்சி ஆட்டத்தில் தனது அபாரமான பந்துவீச்சால் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒரு போட்டியில் கூட விளையாட வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது லக்னோ அணிக்காக அவர் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். லக்னோ அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள வீடியோவில், அர்ஜுன் டெண்டுல்கர் தனது துல்லியமான ‘வைட் யார்க்கர்’ (Wide Yorker) பந்துகளால் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்துவது பதிவாகியுள்ளது.

ஒரு பேட்ஸ்மேன் அவரது யார்க்கர் பந்தை ஸ்கூப் செய்ய முயன்று க்ளீன் போல்ட் ஆனார். மற்றொரு பேட்ஸ்மேன் அர்ஜுனின் பந்தை லெக் சைடில் அடிக்க முயல, அது உயரே எழும்பியது. அதனை அன்றிச் நோர்க்யா ஓடிச் சென்று அபாரமாகப் பிடித்து விக்கெட்டை வீழ்த்த உதவினார்.

26 வயதான அர்ஜுன் டெண்டுல்கர், 2023-ஆம் ஆண்டு மும்பை அணிக்காக ஐபிஎல்-லில் அறிமுகமானார். இதுவரை மொத்தம் 5 போட்டிகளில் விளையாடி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது எகானமி ரேட் 9.37 ஆக உள்ளது.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை ஏகானா மைதானத்தில் எதிர்கொள்கிறது. லக்னோ அணியில் முகமது ஷமி, ஆவேஷ் கான், மொஹ்சின் கான், மயங்க் யாதவ் போன்ற தரமான இந்திய வேகப்பந்து வீச்சாளர்களும், வெளிநாட்டு வீரர் அன்றிச் நோர்க்யாவும் உள்ளனர்.

இவ்வளவு பலமான பந்துவீச்சு வரிசை இருப்பதால், தொடக்கப் போட்டிகளில் அர்ஜுனுக்கு வாய்ப்பு கிடைப்பது கடினம் என்றே கருதப்படுகிறது. இருப்பினும், கீழ் வரிசையில் அதிரடியாக பேட்டிங் செய்யும் திறமை அவரிடம் இருப்பதால், அணியின் தேவைக்கேற்ப அவர் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.