ஐபிஎல் 2026 தொடர் பிரம்மாண்டமாகத் தொடங்கியுள்ள நிலையில், அதற்குப் போட்டியாகக் கருதப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரோ, ஆட்டத்தை விட வீரர்களின் ஒழுங்கீன நடவடிக்கைகளால் உலக அளவில் தலைப்புச் செய்திகளாகி வருகிறது. தொடர் தொடங்கி 5 நாட்களிலேயே பாகிஸ்தானின் முன்னணி நட்சத்திர வீரர்கள் அபராதம் மற்றும் தடைகளைச் சந்தித்துள்ளனர்.

பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா, பஞ்சாப் மாகாண முதல்வர் மரியம் நவாஸை விமர்சித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. “அவர் ஏன் லார்ட்ஸ் மைதானத்தின் ராணியைப் போல நடத்தப்படுகிறார்?” என நசீம் பதிவிட்டிருந்தார். பின்னர் தனது கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக அவர் கூறினாலும், அதனை ஏற்க மறுத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB), அவருக்கு 20 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் (சுமார் 2 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றிலேயே ஒரு வீரருக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதமாகும்.

லாகூர் கலாண்டர்ஸ் அணியின் கேப்டன் ஷாஹீன் அப்ரிடி, அனுமதியின்றி நான்கு விருந்தினர்களை சக வீரர் சிக்கந்தர் ரசாவின் அறைக்கு அழைத்துச் சென்றதற்காகச் சிக்கியுள்ளார். ஹோட்டல் பாதுகாப்பு விதிமுறைகளை (SOP) மீறியதற்காக அவருக்கு 1 மில்லியன் பாகிஸ்தான் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜிம்பாப்வே வீரர் சிக்கந்தர் ரசாவிடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

கராச்சி கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, லாகூர் அணி வீரர் ஃபகார் ஜமான் பந்தின் தன்மையை மாற்ற முயன்றதுகேமராவில் உறுதியானது. இதற்காக கராச்சி அணிக்கு 5 பெனால்டி ரன்கள் வழங்கப்பட்டன. போட்டி நடுவர் ரோஷன் மகாநாமா நடத்திய விசாரணையில், ஃபகார் ஜமானுக்கு 2 போட்டிகளில் விளையாடத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் முல்தான் சுல்தான் மற்றும் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் பங்கேற்க முடியாது.

மேலும் இந்தத் தொடர் லாகூர் மற்றும் கராச்சி ஆகிய இரு நகரங்களில் மட்டும் மூடிய கதவுகளுக்குப் பின் (Closed doors) நடைபெற்று வரும் சூழலில், இத்தகைய ஒழுங்கு நடவடிக்கை புகார்கள் பிஎஸ்எல் தொடரின் பெயருக்குப் பெரும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளன.