பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) 2026 தொடரில் பந்து சேதப்படுத்துதல் புகார்கள் மற்றும் அபராதங்களுக்கு மத்தியில், தற்போது இயற்கையின் சீற்றத்தால் மைதான ஊழியர் ஒருவர் காற்றில் தூக்கி வீசப்பட்ட வீடியோ இணையத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது லாகூர் கடாபி மைதானத்தில் இஸ்லாமாபாத் யுனைடெட் மற்றும் பெஷாவர் சால்மி அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறவிருந்தது. அப்போது திடீரென பலத்த காற்றுடன் கனமழை பெய்யத் தொடங்கியது. பிட்ச் நனையாமல் இருக்க மைதான ஊழியர்கள் பிளாஸ்டிக் தார்பாய்களை வேகமாகப் போர்த்த முயன்றனர்.

அப்போது வீசிய ஒரு பிரம்மாண்டமான காற்றழுத்தம், கனமான தார்பாயை ஒரு பாய்மரம் போல மேலெழும்பச் செய்தது. தார்பாயின் ஒரு மூலையைத் தரையோடு அழுத்திப் பிடிக்க முயன்ற ஊழியர் ஒருவர், காற்றின் வேகத்தைத் தாங்க முடியாமல் தார்பாயுடன் சேர்த்துக் காற்றில் தூக்கி வீசப்பட்டார். சிறிது தூரம் காற்றில் பறந்து பின் அவர் புல்வெளியில் விழுந்த காட்சிகள் அடங்கிய வீடியோ, சமூக வலைதளங்களில் ‘வைரல்’ ஆகி வருகிறது. அதிர்ஷ்டவசமாக அந்த ஊழியர் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.

பிஎஸ்எல் 2026 தொடரின் 7-வது லீக் ஆட்டமான இப்போட்டி, ஒரு பந்து கூட வீசப்படாமல் மழையினால் ரத்து செய்யப்பட்டது. இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது. மேலும் இந்த சீசனில் ஏற்கனவே பல சர்ச்சைகள் வெடித்த நிலையில், இந்த வினோத சம்பவம் ரசிகர்களிடையே பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.