இண்டோனேசியாவைச் சேர்ந்த 11 வயதான ரய்யான் ஆர்கான் திகா என்ற சிறுவன், ஒரு படகின் முனையில் தனது கால்களை அசைத்தபடி செயல்களை செய்வது போல் இருக்கும் வீடியோ ஒன்று, புதிய ட்ரெண்ட்டை உருவாக்கியுள்ளது.
ரியாவ் மாநிலத்தைச் சேர்ந்த திகா என்றழைக்கப்படும் சிறுவன், கருப்பு பாரம்பரிய உடை மற்றும் கண்ணாடியுடன் படகின் முனையில் அமர்ந்தபடி அமைதியாக நடனம் ஆடுவது போல் தனது கால்களை மெதுவாக அசைத்து ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
Bros job is to aura farm pic.twitter.com/1kA8WeuW1R
— Out of Context Human Race (@NoContextHumans) July 5, 2025
“பாசு ஜலூர்” எனப்படும் இந்நிகழ்ச்சி, 17ஆம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வரும் பழமையான படகுப் போட்டி நிகழ்வாகும். இந்நிகழ்ச்சி இண்டோனேசியாவின் சுதந்திர தினத்தையொட்டி ஒவ்வொரு ஆகஸ்டிலும் நடத்தப்படுகிறது.
திகாவின் வீடியோ வெளியான சில நாட்களிலேயே மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வைகள் கிடைத்துள்ளது. இவரது அமைதியான நடைகள், கம்பீரமான உடை மற்றும் ஸ்டைலான அசைவுகள், அவரை இணையத்தில் “The Ultimate Aura Farmer” என அடையாளம் காணச் செய்துள்ளது.
இந்த வீடியோவை பின்பற்றி, உலகம் முழுக்க பல விளையாட்டு வீரர்கள், பிரபலங்கள், பொது மக்கள் என அனைவரும் திகாவைப் போலவே நடித்து வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். ‘ஆரா ஃபார்மிங்’ எனும் சொல் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், இண்டோனேசியா கலாசாரத்துறை அமைச்சர் பத்லி சோன், திகாவை ஜகார்த்தா அலுவலகத்தில் நேரில் சந்தித்து பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது அறிக்கையில், “பாசு ஜலூர் என்பது 2015 முதல் எங்கள் நாட்டின் மறைமுக கலாசார பாரம்பரியங்களில் ஒன்று. இந்நிகழ்ச்சி, சுதந்திர தினம் மற்றும் முக்கியமான இசுலாமிய விழாக்களில் மக்கள் கொண்டாடும் அடையாளமாக இருந்துவந்துள்ளது” என தெரிவித்தார்.
