மீரட்டில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியைக் கழுத்தறுத்துக் கொன்றுவிட்டு, அதைத் திருட்டு நாடகமாக மாற்ற முயன்ற கணவனைப் போலீசார் வெறும் 6 மணி நேரத்தில் கைது செய்துள்ளனர். சாகிப் என்பவனுக்கும் அவனது மனைவி கௌசருக்கும் இடையே நீண்ட நாட்களாகச் சண்டை இருந்து வந்துள்ளது.

சாகிபிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக கௌசர் சந்தேகித்ததே இதற்கு முக்கியக் காரணம். சம்பவத்தன்று காலை, மகள்கள் தூங்கிக் கொண்டிருந்தபோது சாகிப் தனது மனைவியின் கழுத்தை அறுத்துக் கொலை செய்தான். பின்னர், வீட்டில் இருந்த பொருட்களைச் சிதறடித்து யாரோ திருட வந்தவர்கள் இதைக் செய்தது போல நாடகமாடினான்.

ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த ரத்தக் கறைகளையும், சாகிபின் நடவடிக்கைகளையும் கண்டு சந்தேகமடைந்தனர். இதையடுத்து, சாதாரண உடையில் இருந்த பெண் போலீசார் அந்தச் சிறுமிகளிடம் அன்பாகப் பேசி உண்மையை வரவழைத்தனர்.

“அப்பா தான் அம்மாவைக் கொன்றார், போலீசிடம் திருட்டு நடந்ததாகச் சொல்லச் சொன்னார்” என்று சிறுமிகள் உண்மையை உடைத்தனர். மகள்களே சாட்சி சொன்னதால் வேறு வழியின்றி சாகிப் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டான்.

மிகுந்த திட்டமிடலுடன் செய்யப்பட்ட இந்தக் கொலையை, மீரட் போலீசார் தங்களின் சாதுர்யத்தால் சில மணி நேரங்களிலேயே துப்புலக்கி குற்றவாளியைச் சிறையில் அடைத்தனர்.