நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கம் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்க நகை அடகு கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் பாலமுருகன், செயலாளர் அந்தோணிசாமி மற்றும் நிர்வாகிகள் ஆட்சியரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளார்கள்.

அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் எங்கள் சங்கத்தின் கீழ் 50-க்கும் மேற்பட்ட அடகு கடைகள் செயல்பட்டு வருகின்றது. இந்த நிலையில் சிலர் அடகு கடைகளில் தங்க வளையல்களை அடகு வைத்து பணம் பெற்று இருக்கின்றார்கள். அதனை மீண்டும் பரிசோதனை செய்து பார்த்ததில் அந்த நகைகள் போலியானது என தெரியவந்தது. இதனால் அடகு வைத்தவர்களை மீண்டும் தொடர்பு கொண்டபோது அவர்கள் விரைந்து வந்து பணத்தை செலுத்தி விட்டு வளையல்களை பெற்றுச் சென்றார்கள்.

இந்த நகைகளின் தரத்தை காட்டும் எந்திரத்தில் வைத்துப் பார்த்தாலும் உண்மையான நகைகள் போலவே இருக்கின்றது. மேலும் அரசு முத்திரையையும் போலியாக தயாரித்து பொதுமக்களையும் அடகு கடைகளையும் ஏமாற்றி வருகின்றார்கள். இதுபோல போலி நகையை அடகு வைக்கும் கும்பல் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து பெரிய அளவு மோசடி நடைபெறாமல் தடுக்குமாறு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்கள்.