அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்திலிருந்து நீக்கப்பட்ட பயிற்சியாளரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என வீராங்கனைகள் ஆட்சியரிடம் மனு கொடுத்தார்கள். 

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தலைமை தாங்க ஆட்சியரின் உதவியாளர் விஜயராகவன் என பலர் பங்கேற்க மாவட்ட ஆட்சியர் முன்னிலை வகித்தார்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீராங்கனைகள் மனு ஒன்றை கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியுள்ளதாவது, வேலூர் மாவட்டத்தில் உள்ள சத்துவாச்சாரியில் இருக்கும் அரசு பளுதூக்கும் பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் கவிதாவிடம் சென்ற சில வருடங்களாக பயிற்சி பெற்று வருகின்றோம். இந்த நிலையில் சென்ற பத்தாம் தேதி முதல் அவர் பயிற்சி மையத்துக்கு வரவில்லை.

இது பற்றி காரணம் கேட்டதற்கு பணி நீக்கம் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. அவர் அளித்த சிறப்பான பயிற்சியின் காரணமாக பல வீராங்கனைகள் சர்வதேச தேசிய அளவிலான போட்டிகளில் பல்வேறு பதக்கங்கள் பெற்றிருக்கின்றார்கள். பல தேசிய அளவிலான பளுதூக்கும் வீராங்கனைகளை கவிதா உருவாக்கி எங்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்திருக்கின்றார். ஆகையால் நாங்கள் நிறைய பதக்கங்களை வெல்ல மீண்டும் பயிற்சியாளர் கவிதாவை பணியில் சேர்க்க வேண்டும் என தெரிவித்திருந்தார்கள்.