துருக்கியின் இஸ்தான்புல்லில் பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடந்த அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே போர் போன்ற ஒரு சூழ்நிலை மீண்டும் உருவாகியுள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை தோல்விக்கு பாகிஸ்தானையே குற்றம் சாட்டிய ஆப்கானிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித், பாகிஸ்தானின் கோரிக்கைகள் நியாயமற்றவை என்றும், தனது நாடு தன்னைத் தற்காத்துக் கொள்ள முழு உரிமை உண்டு என்றும் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் “போர் மட்டுமே இருக்கும்” என்று ஆப்கானிஸ்தானுக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்த நிலையில், முஜாஹித்தின் இந்த அறிக்கை அதற்குப் பதிலடியாகக் கருதப்படுகிறது.

ஆப்கானிஸ்தான் தனது பிராந்தியத்தில் பாதுகாப்பின்மையை விரும்பவில்லை என்றும், போர் என்பது தாலிபான் அரசாங்கத்தின் முதல் தேர்வல்ல என்றும் முஜாஹித் வலியுறுத்தியுள்ளார். ஒருவேளை போர் நடந்தால், தங்களைத் தற்காத்துக் கொள்ள உரிமை உண்டு என்றும் அவர் கூறியுள்ளார்.

கடந்த மாதம் காபூல் மற்றும் பிற இடங்களில் பாகிஸ்தான் விமானப்படை நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே போர் வெடித்தது குறிப்பிடத்தக்கது. அதில், தாலிபான் படைகள் பதிலடி கொடுத்து 58 பாகிஸ்தான் வீரர்களைக் கொன்றதாகக் கூறப்பட்டது.

இந்த மோதல்களுக்குப் பிறகு, கத்தார் மற்றும் இஸ்தான்புல்லில் நடந்த பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு தற்காலிகப் போர் நிறுத்தம் நீடிக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.