சீனாவில், மருத்துவ விடுப்பில் இருந்த ஒரு ஊழியர், தான் 16,000 அடிகள் நடந்ததற்காக வேலையில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து வெற்றி பெற்று நஷ்டஈடு (Compensation) பெற்றுள்ளார். ஜியாங்சு மாகாணத்தில் (Jiangsu province) நடந்த இந்தச் சம்பவம், ஊழியர்களின் உரிமைகள் குறித்த புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

சென் என்ற குடும்பப்பெயரைக் கொண்ட அந்த ஊழியர், 2019ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில், தான் வேலை செய்யும் இடத்தில் ஏற்பட்ட முதுகு வலி மற்றும் பின்னர் வலது பாதத்தில் ஏற்பட்ட வலி (ஹீல் ஸ்பர் – Heel Spur) காரணமாக இருமுறை மருத்துவ விடுப்பு எடுத்திருந்தார். விடுப்புக்கான மருத்துவச் சான்றிதழ்களையும் அவர் சமர்ப்பித்திருந்தார்.

அந்த ஊழியர் பொய்யாக உடல்நிலை சரியில்லாதது போல் நடித்து விடுப்பு எடுத்ததாகச் சந்தேகித்த நிறுவனம், அவரது நடவடிக்கைகளைக் கண்காணித்தது. அவர் மருத்துவ விடுப்பில் இருந்த நாட்களில், 16,000 அடிகள் நடந்ததை வைத்து, அவர் உடல்நிலை சரியில்லாததாக பொய் சொல்கிறார் என்று குற்றம் சாட்டிய நிர்வாகம், அவரைப் பணியிலிருந்து நீக்கியது.

இதை எதிர்த்துச் சென் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்-ஐ நீக்கியது சட்டவிரோதம் என்று தீர்ப்பளித்ததுடன், அவருக்கு நஷ்டஈடு வழங்க உத்தரவிட்டது. இந்தத் தீர்ப்பு, வேலையளிப்போரின் கடமைகள் மற்றும் ஊழியர்களைக் கண்காணிப்பதற்கான எல்லைகள் குறித்துச் சீன சமூக வலைத்தளங்களில் பரவலான விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.