மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக எரிபொருள் இறக்குமதி பாதிக்கப்பட்டு, கடந்த ஒரு வாரமாக நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்தச் சூழலைச் சமாளிக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், சிலிண்டர் விநியோக மையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் பர்னாலா மாவட்டத்தைச் சேர்ந்த 66 வயது முதியவர் பூஷன் குமார் மித்தல், சிலிண்டர் வாங்குவதற்காக அதிகாலை முதல் காத்திருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இரண்டு நாட்களாக அலைந்து ஒருவழியாக டோக்கன் பெற்று, சுமார் இரண்டு மணி நேரம் வரிசையில் நின்றிருந்த அவர் திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டும், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
